“மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்படும் மக்களாட்சி என்பதே ஜனநாயகக் கோட்பாடு”. இது ஜனநாயகம் தொடர்பாக உலகெங்குமுள்ள அரசியல் கோட்பாட்டாளர்களால் வழங்கப்படும் விளக்கமாகும். எல்லா ஜனநாயக நாடுகளிலும் மக்களால் தெரிவு செய்யப்படும் ஆட்சி என்பது உண்மைதான். ஆனால் பல நாடுகளில் அவை மக்களுக்கான மக்களாட்சியாக விளங்குகிறதா என்பது கேள்விக்குரிய விடயமே. மக்களால் தெரிவு செய்யப்படுவது என்பதில்கூட மக்களின் அதிகாரம் ஒரு வரையறைக்குட்பட்ட விதத்திலேயே பிரயோகிக்க அனுமதிக்கப்படுகிறது.
ஜனநாயகத்தில் ஆட்சியதிகாரத்தை உருவாக்கும் வழிமுறை என்பது தேர்தலாகவே காணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகளே தெரிவு செய்கின்றன. சில வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டாலும் அவர்கள் பின்னால் அவர்களை வழிநடத்தும் அல்லது சில குழுக்களாலோ இருக்கும். ஒரு சில வேட்பாளர்களில் ஒருவரை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். இப்படி வேட்பாளர்களாக நியமிக்கப்படுபவர்கள்கூட தேர்தலுக்காகப் பெருமளவு செலவு செய்யக்கூடியளவு பணம் படைத்தவர்களாக இருக்கவேண்டும். அதிலும் இலங்கையைப் பொறுத்த வரையில் மாவட்ட ரீதியான விகிதாசார தேர்தல் என்பதால் வேட்பாளர் மாவட்டம் முழுவதும் தேர்தல் செலவுகளை மேற்கொள்ளக்கூடியளவு பண வசதி படைத்தவராக இருக்கவேண்டும்.
அவ்வகையில் தங்கள் சொந்த நலன்களைப் பின் தள்ளி மக்களுக்குப் பணியாற்றும் அர்ப்பண உணர்வு கொண்ட நேர்மைசாலிகள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது.
எனவே மக்கள் தாம் விரும்பும் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்வது என்பது கட்சிகளால் நியமிக்கப்படும் ஒரு சிலருக்குள்ளேயே தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யமுடியும் என்றளவுக்கு மக்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது. அதேபோன்று ஆட்சி செய்பவர்களும் அவர்களில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியினரேயாவர். அக்கட்சியிலும் ஆட்சியதிகாரம் பிரதமரினதும் அமைச்சரவையினதும் கைகளிலேயே இருக்கும். ஆனால் இலங்கையிலோ ஆட்சியதிகாரம் என்பது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி கைகளிலேயே குவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களால் தெரிவு செய்யப்படும் மக்களுக்கான மக்களாட்சி என்ற கோட்பாடு எவ்வளவு போலியானது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
எனவே மக்களுக்கான ஆட்சி என்பது ஆட்சிக்காகவே மக்கள் என்பதையும், அந்த ஆட்சி என்பது வசதி படைத்தவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் மூடி மறைக்கும் ஒரு அழகான மூடுதிரையாகும்.
இன்று இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் இந்த உண்மையைத் தெளிவாகவே புலப்படுத்துகின்றன.
அரிசி, கோதுமை, பால்மா, சீனி, பருப்பு உட்பட அத்தியாவசியத் தேவைப்பொருட்கள் மக்களால் வாங்க முடியாதளவுக்கு விலையுயர்த்தப்பட்டுள்ளன. எரிபொருட்கள், எரிவாயு என்பவற்றின் விலைகள் அடிக்கடி அதிகரிக்கப்படுவதுடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள நாட்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளது. அந்நியச்செலாவணிக் கையிருப்பு இல்லாமையே இதற்குக் காரணமெனக் கூறப்படுகிறது.
எனவே மக்களுக்கான அரசாங்கம் என்பது இங்கே பொய்யாகிப் போய்விட்டது. அரசாங்கம் மக்களை வருத்துவதன் மூலம் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்கிறத. அதாவது அரசாங்கத்துக்காக மக்கள் என்ற நிலை உறுதியாகி விட்டது.
எனவே தான் அரசாங்கம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் குறைந்த பட்சமாவது நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கத்துக்காகவே மக்கள், மக்களுக்காக அரசாங்கம் அல்ல என்பது மக்கள் உதாசீனப்படுத்தப்படுவதன் மூலம் தெளிவாகிறது.
எனவேதான் மக்கள் “கோத்தா கோ ஹோம்”, “மைனா கோ ஹோம்” போன்ற போராட்டங்களில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷ் தரப்பினரோ இப்போராட்டங்களை வன்முறைகள் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அது பலனளிக்காதது மட்டுமின்றி மஹிந்த தனது பிரதமர் பதவியைத் துறக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவோ, ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லையெனக் கூறிக் கொண்டே போராட்டத்தைச் சிதைக்கும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேச்சுகளை நடத்தி ஒரு குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகப் போராடும் மக்கள் நீண்ட இழுபறி ஏற்படுத்தக்கூடிய சலிப்புக் காரணமாக போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வகையில் ரணில் காய்களை நகர்த்துகிறார்.
இரண்டாவது எரிபொருள், சமையல் எரிவாயு போன்ற பொருட்களுக்கு மக்கள் நாட் கணக்கில் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான நேரம் கிடைக்கப் போவதில்லை. அதனால் போராடுபவர்களின் தொகை குறைவடைந்து போராட்டம் தொய்வடையும் நிலை ஏற்படலாம்.
மூன்றாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் எல்லா இடங்களிலும் வல்லமை பெற்ற சிலரே மாறிமாறி வரிசையில் நின்று எரிபொருளை வாங்கிக் கறுப்புச் சந்தையில் விற்கின்றனர். அதன் காரணமாகப் பெரும்பான்மையான மக்கள் வரிசையில் நாட்கணக்காக நின்ற விட்டு ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது.
நான்காவதாகப் போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்கள் வெவ்வேறு இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
ஒட்டு மொத்தமாக தற்சமயம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் எதையும் தீர்க்க எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. மக்களின் ஊதியமோ, வருவாயோ அதிகரிக்கப்படாத நிலையில் அவர்கள் மலைபோல் உயரும் விலைவாசியில் எப்படி வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு எவ்வித கவலையுமில்லை.
மக்களுக்காக மக்களின் அரசாங்கம் என்ற ஜனநாயகக் கோட்பாடு முற்றிலும் பொய்ப்பிக்கப்பட்டு அரசாங்கத்துக்காக மக்கள் என்ற நிலையே இப்போது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
28.06.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை